கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இதனிடையே பயிற்சி நிலையங்கள் மற்றும் மைதானங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ரசிகர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில நாள்களுக்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கப் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா பேசுகையில், ''விளையாட்டு வீரர்கள் நமது நாட்டின் சொத்து. கரோனா வைரஸ் தொற்று ஜூன் மாதத்தில்தான் தீவிரமடையும் என கூறப்பட்டுள்ள நிலையில், வீரர்களின் பயிற்சிகளில் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என புரியவில்லை'' என்றார். இவரின் கருத்துக்கு பல விளையாட்டு வீரர்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதைப்பற்றி துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பேக்கர் பேசுகையில், ”பயிற்சியில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் வரும் வரை நான் பயிற்சி நிலையங்களுக்கு திரும்பப் போவதில்லை. அதுவரை கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட மின்னணு இயந்திரங்களைக் கொண்டு வீட்டிலேயே பயிற்சி செய்துகொள்கிறோம்'' என்றார்.
இதனிடையே இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கம் சார்பாக தேசிய அளவிலான முகாம், டெல்லியில் ஜூலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா பேசுகையில், ''வீட்டில் எவ்வாறு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்ற புரிதல் எங்களுக்கு உள்ளது. பயிற்சி நிலையங்களிலும் தனிநபர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி மட்டுமே கொடுக்கப்படும் என விளையாட்டுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன. நாட்டில் வேகமாக கரோனா வைரஸ் பரவும் இந்த சூழலில், வீட்டில் இருப்பது மட்டுமே பாதுகாப்பு என நினைக்கிறேன்'' என்றார்.
மைதானங்களும், பயிற்சி நிலையங்களும் திறக்கப்பட்டதால், வீரர்கள் பயிற்சிக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை என இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!