பர்மிங்ஹாம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஒன்பதாவது நாளான நேற்று (ஆக. 6) தடகளம், மல்யுத்தம், மகளிர் கிரிக்கெட், பாரா டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி, லான் பால், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்றது. இதில், இந்தியா நேற்று மட்டும் 4 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களை பெற்றது.
மல்யுத்தம்: இந்தியா மல்யுத்தத்தில் நேற்று முன்தினம் (ஆக. 5) மூன்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றிய நிலையில், நேற்றும் (ஆக. 6) மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது. ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் ரவி தாஹியா, மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகட், ஆடவர் 74 கிலோ எடைப்பிரிவில் நவீன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இதில், வினேஷ் போகட் 2014, 2018 ஆகிய இரு காமன்வெல்த் தொடர்களிலும் தங்கம் வென்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
மல்யுத்தத்தில் நேற்று மூன்று தங்கம் மட்டுமின்றி, மூன்று வெண்கலத்தையும் இந்தியா கைப்பற்றியது. மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் பூஜா கெலாட், மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் பூஜா சிஹாக், ஆடவர் 97 கிலோ எடைப்பிரிவில் தீபக் நெஹ்ரா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
டேபிள் டென்னிஸ்: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பாரா டேபிள் டென்னிஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேல், நேற்று நடைபெற்ற காமன்வெல்த் இறுதிப்போட்டியில் வென்று தங்கத்தை தட்டிச்சென்றார். இது இத்தொடரில் இந்தியாவின் 13ஆவது தங்கமாகும். பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய மற்றொரு இந்திய வீராங்கனை சோனல் பென் படேல் வெண்கலம் வென்றார்.
குத்துச்சண்டை: இந்தியாவின் சாகர் அஹ்லாவத் (ஆடவர் சூப்பர் ஹெவிவெயிட்), அமித் பாங்கல் (ஆடவர் ஃபிளைவெயிட்), நிகத் ஜரீன் (மகளிர் லைட் ஃபிளைவெயிட்), நிது கங்காஸ் (மகளிர் குறைந்தபட்ச எடைப்பிரிவு) ஆகியோர் தங்களின் பிரிவுகளின் இறுதிப்போட்டிக்களுக்கு முன்னேறியுள்ளனர்.
ஜெய்ஸ்மின் லம்போரியா (மகளிர் 60 கிலோ லைட்வெயிட்) ஹுஸாம் உதின் முகமது (ஆடவர் 57 கிலோ ஃபெதர்வெயிட்), ரோஹித் டோகாஸ் (ஆடவர் 67 கிலோ வெல்டர்வெயிட்) ஆகியோர் தங்களின் அரையிறுதிசுற்றில் தோல்வியுற்று வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
லான் பால்: ஆடவர் லான் பால் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நால்வர் அணி, வடக்கு அயர்லாந்திடம் தோல்வியுற்று, வெள்ளியை கைப்பற்றியது.
தடகளம்: மகளிர் 10,000 மீட்டர் நடை ஒட்டபந்தயத்தில் பிரியங்கா கோஸ்வாமி, ஆடவர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் ஆகியோர் இந்தியாவுக்கு தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.
ஹாக்கி & கிரிக்கெட்: ஆடவர் ஹாக்கி போட்டியில், இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
பேட்மிண்டன் & ஸ்குவாஷ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து, ஆடவர் பிரிவில் லக்ஷயா சென் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். ஸ்குவாஷ் கலப்பு இரட்டை பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தீபிகா பல்லிகல், சௌரப் கோஷல் ஜோடி தோல்வியடைந்தது.
பதக்கப்பட்டியல்: இதன்மூலம், இந்தியா பதக்கப்பட்டியலில் மொத்தம் 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என 40 பதக்கங்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா 22 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா