சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஆக. 10) சந்தித்து வாழ்த்துப்பெற்று, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை பெற்றனர். இச்சந்திப்பு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த இந்திய 'பி' அணியின் பயிற்சியாளர் ரமேஷ்,"44ஆவது செஸ் ஒலிம்பியாட் மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும்; எங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிய முறையில் ஏற்படுத்திய காவல் துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுவரை நடந்த ஒலிம்பியாட் போட்டியில் மிக சிறந்த ஒலிம்பியாட் என இதைக் கூறலாம். பெண்கள் அணி தங்கம் வெல்லும் நிலையில் இருந்தது. ஆனால், இறுதியில் வெண்கலம் பெற்றது வருத்தமளிக்கிறது. அடுத்த ஒலிம்பியாட்டில் உறுதியாக தங்கம் வெல்வோம்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
''மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற அணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலா ஒரு கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்று மற்ற மாநில முதலமைச்சர்களும் நிதி அளிக்க வேண்டும்" என்று இந்திய 'பி' அணியின் பயிற்சியாளர் ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டைச்சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது 17ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினிடம் இச்சந்திப்பில் வாழ்த்துப்பெற்றார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு 1 கோடி பரிசு