சென்னை: சர்வதேச டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 12ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் 30 வயதான போலந்து வீராங்கனை மேக்னா லினெட்டை செக்குடியரசின் 17 வயதான இளம் வீராங்கனை லிண்டா ஃப்ருவிட்ரோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை கைப்பற்றினார்.
WTA தொடரில் லிண்டா ஃப்ருவிட்ரோவா வெல்லும் முதல் சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். அறிமுக தொடரில் மகுடம் வென்றவர் என்ற வரலாற்றை சாதனையும் லிண்டா படைத்தார்.
நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இறுதி சுற்று ஆட்டத்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மைதானத்தில் அமர்ந்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா ஃப்ருவிட்ரோவாவுக்கு கேடயத்துடன் 26 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்தார்.
இதே போல் ஒற்றையர் பிரிவில் 2 ஆம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்னா லினெட்-க்கு கேடயத்துடன் 15 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார். சென்னையில் ஒரு வாரம் களைகட்டிய மகளிர் டென்னிஸ் தொடர் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: டென்னிஸ் விளையாட்டில் கோடிகளில் புரண்ட ரோஜர் பெடரர் - பரிசுத்தொகை விவரம்!