அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி யு.எஸ்.பி.ஏ. சூப்பர் வெல்டர்வைட் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் பேட்ரிட் டே, சகநாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் சார்லஸ் கான்வெலுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 10ஆவது சுற்றின்போது கான்வெல், பேட்ரிக்கை நாக்-அவுட் முறையில் அவுட் செய்தார்.
கான்வெல் தந்த குத்து பலமாக இருக்கவே, பேட்ரிக் டே களத்திலேயே நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அவரது தலையில் ஏற்பட்ட பல குத்துகளால் பேட்ரிக் டே சுயநினைவையும் இழந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதில் பேட்ரிக் டே உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேட்ரிக் டேவின் மரணம் குறித்து கான்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைத்தேனேதவிர, பேட்ரிக் டே உன்னைக் காயப்படுத்த வேண்டும் என ஒருபோதும் நினைக்கவில்லை. இதுபோன்ற கதி இனி யாருக்கும் வர வேண்டாம். இந்தப் போட்டியின் வீடியோவை நான் மீண்டும் மீண்டும் பார்த்தேன். இந்த நிலைமை உனக்கு மட்டும் ஏன் நடந்தது. நீ விரைவில் குணமடைய வேண்டும் என பலமுறை நான் கண்ணீருடன் பிரார்த்தனை செய்துள்ளேன். இனி குத்துச்சண்டை போட்டியிலிருந்து விலகுவது குறித்து யோசித்துள்ளேன்.
ஆனால் நீ விரும்புவது அதுவல்ல என்று எனக்குத் தெரியும். நீ போராளி என்று எனக்குத் தெரியும். இதனால் நான் போராட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவேன். ஏனென்றால் அதைதான் நீயும் விரும்பினாய், நானும் விரும்புகிறேன். இனி நான் உன்னை ஒவ்வொரு நாளும் எனது ஊக்கமாக பயன்படுத்திக் கொள்வேன். #ChampPatrickDay" என இரக்கத்துடன் பதிவிட்டார்.