நடப்பு ஆண்டின் முதல் மல்யுத்த தொடரான ரோம் ரேங்கிங் தொடர் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஆடவர் 82 கிலோ கிரேக்கோ ரோமன் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் குர்ப்ரீத் சிங் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் சுற்றில் பங்கேற்ற இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் பூனியா முதல் சுற்றில் அமெரிக்காவின் சைன் அலென் ரூதர்போர்டை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். பின் காலிறுதிச் சுற்றில் மற்றொரு அமெரிக்க வீரர் ஜோசஃப் கிறிஸ்டோஃபர் மெக் கென்னாவை 4-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
![Bajrang Punia enters final in Rome wrestling](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/2020_1largeimg06_jan_2020_204717877_0601newsroom_1578325334_930.jpeg)
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வாசில் சுப்தாருடன் (Vasyl Shuptar) மோதினார். இப்போட்டியில் இரு வீரர்களும் தங்களது முழுப்பலத்தையும் வெளிப்படுத்தியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இறுதியில், பஜ்ரங் பூனியா 6-4 என்ற புள்ளி கணக்கில் த்ரில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர் அமெரிக்காவின் ஜோர்டன் மைக்கேல் ஒலிவருடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இதில் வெற்றிபெற்று அவர் தங்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: 'எந்த இடத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சியே' - கேஎல் ராகுல்