இந்திய தடகள சம்மேளனத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பகதூர் சிங். இவர் இந்தியாவிற்காக 1978, 82ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர். மேலும் ஏசியன் டிரக் தடகள போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என பதக்கங்களை வென்று குவித்தவர்.
இதற்காக பகதூர் சிங்கிற்கு, விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜூனா விருதை 1976ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பின் 1983ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1998ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருதையும் வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.
இதையடுத்து 1995ஆம் ஆண்டு முதல் இந்திய தடகள சமேளனத்தின் தடகள பயிற்சியாளராகவும் பகதூர் சிங் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது 25 ஆண்டுகால தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஏஃப்.ஐயின் தலைவர் அடில் ஜே. சுமரிவல்லா கூறுகையில், "70 மற்றும் 80களில் இந்தியாவிற்காக தடகள விளையாட்டில் பல பதக்கங்களை வென்று, 1995ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் உலக தடகள அரங்கில் இந்தியா பல சாதனைகள் புரிய காரணமாக அமைந்த பகதூர் சிங்கின் மகத்தான பங்களிப்பை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்" என்று தெரிவித்தார்.