பெங்களூரு: 18 வயதுக்குட்பட்ட (Under 18) பெண்கள் அணிகளுக்கான ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் 25வது சீசன் பெங்களூரில் நடைபெற்றது. இதனை, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண் கவுடா, உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண், கூடைப்பந்து இந்திய தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுவரை சீனா 16 முறை கோப்பை வென்றுள்ளதால், இந்த முறையும் சீனா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கியது முதல், ஆஸ்திரேலிய வீராங்கனைகள், ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தி வந்தனர். இந்நிலையில், 81-55 (22-14, 22-16, 16-13, 21-12) என்ற கணக்கில், சீனாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, முதன்முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா தங்கமும், சீனா வெள்ளியும், தைபே வெண்கல பதக்கம் வென்றது.
அடுத்த ஆண்டு ஸ்பெயினில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட (Under 19) மகளிர் அணிகளுக்கான உலக கோப்பை தொடருக்கு, ஆஸ்திரேலியா, சீனா, சீன தைபே, ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளது. போட்டியில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 2024ல் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 'டிவிசன் பி' பிரிவுக்கு தள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை கிரிக்கெட் : 6 வது முறையாக கோப்பையை வென்றது இலங்கை