உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி தொடங்விருந்த 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி) இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்படுவது இதுவே 124 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாகும். இந்தத் தொடரில் 11 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கவிருந்த நிலையில், இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் 57 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டதால், தகுதி பெற்ற வீரர்கள் அடுத்தாண்டு நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்களா அல்லது அவர்களுக்கு மீண்டும் தகுதிச்சுற்று போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இதில் தேர்வானவர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்பார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து 32 சர்வதேச விளையாட்டு சம்மேளனத்துடன் ஐ.ஒ.சி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தும் தேதி குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விமான சேவை ரத்து; ஸ்பெயினில் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை!