பாரிஸ்:பிரான்ஸில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை வில்வித்தைத் தொடரின் 3ஆவது சுற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோதி-அபிஷேக் ஜோடி தங்கப்பதக்கம் வென்றது. இந்த உலகக்கோப்பையில் இந்தியா சார்பாக வென்ற முதல் தங்கம் இதுவாகும். இந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி மெக்சிகோவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்திய வீரர்களான ஜோதி-அபிஷேக் ஜோடி தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தனர். பிரெஞ்சு ஜோடியான ஜீன் போல்ச் மற்றும் 48 வயதான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சோஃபி டோட்மாண்ட் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு 152-149 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றினர். கலப்பு இரட்டையர் அணியில் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பை தங்கம் கிடைத்துள்ளது.
உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜோதி, ஏழு மாதங்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் சோதனையில் ஜோதி எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாமல் போனது. இதனையடுத்து இப்போட்டியில் நன்றாக விளையாடினார். மேலும் மற்றொரு தனிநபர் அரையிறுதியில் பிரெஞ்சு வீராங்கனை சோஃபியை எதிர்கொண்டு வெள்ளி வென்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் 4 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இலக்கை நோக்கி துல்லியமாக குறிவைத்த இந்திய அணி, முதல் வாய்ப்பில் 40 புள்ளிகளையும், 2ஆவது வாய்ப்பில் 36 புள்ளிகளையும் பெற, 3ஆவது வாய்ப்பில் இரு அணிகளும் 39 என சமபுள்ளிகளையும் பெற்றன. 4ஆவது மற்றும் இறுதி வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணி, 37 புள்ளிகள் எடுக்க, முடிவில் 152-149 என்ற புள்ளிக்கணக்கில் பிரெஞ்சு அணியை வீழ்த்தி தொடரில் முதல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன்26) தீபிகா குமாரி, அங்கிதா பகத் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் ஆகிய மூவரும் பங்கேற்கும் பெண்கள் ரிகர்வ் குழு போட்டியில் தங்கப்பதக்கத்திற்காக போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் நடைபெறவுள்ள ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து - கடினமான பிரிவில் இந்தியா!