28 ஆவது சில்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவில் இன்று தொடங்கியது. ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன.
முக்கியமான அனுபவ வீரர்கள் காயம் காரணத்தால் விலகியுள்ள நிலையில், இளம் வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிபடுத்தி ஜப்பான் அணிக்கு நெருக்கடியை கொடுத்தது. முதல்பாதியின் 24 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் வாய்ப்பை, இந்திய வீரர் வருண்குமார் கோலாக மாற்ற, இந்திய அணி 1-0 என முன்னிலையுடன் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி தொடங்கிய நிலையில், ஜப்பான் அணி கோல் அடிக்க முயன்றபோது இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக தடுத்து இந்திய அணிக்கு உதவினார். பின்னர் 56 ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய சிம்ரஜீத் சிங் இந்தியாவின் இரண்டாவது கோலை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதிவரை ஜப்பான் அணி கோல் அடிப்பதற்காக எடுத்த அனைத்து முயற்சிகளையும் இந்திய அணி வீரர்கள், சிறப்பாக எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். ஆட்ட நாயகனாக வருண்குமார் தேர்வு செய்யப்பட்டார். நாளை நடைபெறவுள்ள போட்டியில், இந்திய அணி பலம் வாய்ந்த தென்-கொரியாவை எதிர்கொள்கிறது.