ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வரில் உள்ள கலிங்க மைதானத்தில் எஃப்.ஐ.எச்., சீரிஸ் பைனல்ஸ் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 5ஆவது இடத்திலுள்ள இந்திய அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் 21ஆவது இடத்திலுள்ள போலாந்தை நேற்று இரவு எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பம் முதலே போலாந்தின் சிறப்பான தடுப்பாட்டத்தால் இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை. பல்வேறு முயற்சிகளுக்கு பின் இறுதியாக 21ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் முதல் கோலை அடித்தார். பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் போலாந்து கோல் அடித்து இந்தியாவிற்கு அதிர்ச்சியளித்தது. இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய அணி 26ஆவது நிமிடத்தில் தனது 2ஆவது கோலை பதிவு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
போலாந்தின் சிறப்பான தடுப்பாட்டத்தின் காரணமாக கடுமையாக போராடியும் இரண்டாவது பாதியில் இந்தியாவால் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பாக இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் 2 கோல்களையும் ஹர்மன் ப்ரீத் சிங் ஒரு கோலையும் பதிவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தை உறுதி செய்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற கடைசி லீக் போட்டியில் டிரா செய்தாலே போதுமாகும். இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வரும் 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு சந்திக்கிறது.