இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஜூனியர் மகளிர் ஹாக்கி அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஹாக்கித் தொடர் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
களத்தில் வேகம் காட்டத் தொடங்கிய இந்திய ஜூனியர் அணியின் இந்திய வீராங்கனை லால்ரிங்கி ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு பதிலடிதர நியூசிலாந்து அணி தவறியதால் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாதியில் இந்திய அணிக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் கோல் அடிக்காமல் வீணாக்கியது.
அதேபோல, நியூசிலாந்து அணிக்கு வழங்கப்பட்ட ஒரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றத் தவறியது. இப்படி இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்டதால், ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெறுமா அல்லது நியூசிலாந்து அணி கம்பேக் தந்து போட்டியை டிரா செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நேரத்தில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்திய அணியின் நடுகள வீராங்கனை பிரப்லீன் கவுர் கோல் அடிக்க, ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், இந்திய ஜூனியர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஹாக்கி பிதாமகன் தயான் சந்த்தை மறந்த இந்தியா!