2019ஆம் ஆண்டுக்கான சீரியஸ் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி ஜப்பானில் நடைபெற்றது. இதில் இந்திய அணியை எதிர்த்து ஜப்பான் அணி விளையாடியது. இந்த போட்டியில் வெற்றிபெற்று வாகை சூடினால் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் தொடரின் தகுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இதன் ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் கோல் அடிக்க, ஆட்டத்தின் முடிவு எவ்வாறு போகிறது என்பதை முன்கூட்டியே சொல்லும் விதமாய் அந்த கோல் அமைந்தது.
![ஹாக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3643490_indiajap.jpg)
இதனையடுத்து சொந்த மண்ணில் களமிறங்கிய ஜப்பான் அணியின் கனோன் மோரி பதிலடியாய் 11ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை ஏற்பட்டு விறுவிறுப்பானது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணியினர், தாக்குதல் ஆட்டத்தையே கடைபிடித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது குவார்ட்டர் நேரத்தில், இந்திய அணிக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தது.
![ஹாக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3643490_navneet.jpg)
பின்னர் இந்தியாவின் ட்ராக் பிளிக்கர் குர்ஜித் இந்தியாவுக்காக இரண்டாவது கோலை அடிக்க, இந்திய அணி 2-1 என முன்னைலை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற நான்காவது குவார்ட்டர் நேரத்தில், இந்திய வீராங்கனைகளின் முயற்சிகளை ஜப்பான் கோல் கீப்பர் இரண்டு முறை தகர்க்க, மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட முயற்சியில் ட்ராக்-பிளிக்கர் குர்ஜித் வெற்றிபெற்று, 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தார்.
![ஹாக்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3643490_hockey.jpg)
இறுதி நேர முடிவில் இந்திய அணி ஜப்பான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எஃப்.ஐ.எச். சீரியஸ் தொடரை வென்றதோடு, ஒலிம்பிக் தொடரின் தகுதி சுற்றுக்கும் தகுதி பெற்றது. இந்த தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்திய கேப்டன் ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இந்த தொடரை வென்று சாதித்த இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.