இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை நாட்டில் இந்த வைரஸால் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசு, தன்னார்வ அமைப்புகள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியதாக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பிரதமரின் அறிவுறுத்தல்படி நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்தக் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நான் பிரமதரின் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.