யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் லீக் ஏ குரூப் 4 பிரிவில் ஜெர்மனி, உக்ரைன் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே உக்ரைன் அணியின் ரோமன் முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக ஜெர்மனி அணியின் லெரோய் ஷேன் 23ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என்ற நிலைக்கு வந்தது.
இதனால் முன்னிலைப் பெறுவதற்காக இரு அணியினரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடினர். அதில் 33ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரர் டிமோ வெர்னர் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்று முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் மீண்டும் ஜெர்மனி அணியின் வெர்னர் கோல் அடிக்க, அந்த அணி 3-1 என்ற வெற்றிக்கு அருகில் சென்றது. இதன்பின்னர் உக்ரைன் அணியினர் கோல் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்டன.
இறுதியாக ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் ஜெர்மனி அணி 9 புள்ளிகளுடன் குரூப் 4இல் முதலிடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் வீழ்ந்த போர்ச்சுகல்!