கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் உலகில் இதுவரை 30 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இதனால் உலகின் பல்வேற்று நாடுகள் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.
மேலும், உலகின் அனைத்து வகையான விளையாட்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் தொடங்குவதாக இருந்த லண்டன் மாரத்தான் போட்டியும் தற்போது அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பாதிக்கபடும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சேலன்ஞ் 2.6 அல்லது 26 என்ற சேலஞ்சை தொடங்கி, நிதித்திரட்டுவதற்கு பல்வேறு பிரபலங்களும் களமிறங்கியுள்ளனர். மேலும் லண்டன் மாரத்தான் போட்டியும் 26 மைல்களைக் கொண்டதால் இதற்கு 2.6 அல்லது 26 சேலஞ்ச் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்ட ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் காரெத் பலே, சவுத் வேல்ஸில் உள்ள வெலிண்ட்ரே புற்றுநோய் மையத்திற்கு உதவுவதற்காக 26 முறை ஜக்லிங் செய்து, இறுதியில் தலைக்குமேல் பந்தை உதைத்து (overhead kick) அசத்தினார். இந்த சேலஞ்சை நிகழ்த்திய பலேவின் காணொலி சமூக வலைத்தளங்களில், கால்பந்து ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள அனைத்து கால்பந்து போட்டிகளும், கோடை காலத்துக்குப் பிறகுதான் தொடங்கப்படும் என ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தக் கோடையில் லா லிகா தொடங்கப்படாது: ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர்