ஸ்பெயினில் கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 12ஆம் தேதி லா லிகா கால்பந்து தொடர் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்பெருந்தொற்றின் தாக்கம் நாளடைவில் படிப்படியாக குறைந்துவந்ததால், மே 4ஆம் தேதியிலிருந்து லா லிகா தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பார்வையாளர்களின்றி மைதானங்களில் பயிற்சி பெற அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான கால்பந்து தொடர் ஜூன் 8ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பார்சிலோனா வீரர்கள் நேற்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, தடுப்பாட்ட வீரர்களான லெங்லேட், ஜெரார்டு பிகே, ஆகியோரைக் கடந்து அசத்தலான கோல் ஒன்றை அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தப் பயிற்சியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களான சுவாரஸ், க்ரீஸ்மேன், புஸ்கட்ஸ், டி ஜாங், ரிக்கி பூஜ், அன்சூ ஃபாடி ஆகியோர் பங்கேற்றனர். நடப்பு லா லிகா கால்பந்து சீசன் புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 27 போட்டிகளில் 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ரியல் மாட்ரிட் 56 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: எங்க ஆட்டம் எப்பவும் வெறித்தனமா இருக்கும்’ - கால்பந்திலிருந்து காக்கிக்கு மாறிய இந்துமதி கதிரேசன்!