கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் தொடர், எட்டு அணிகள் கொண்ட மினி தொடராக ஆகஸ்ட் மாதம் லிஸ்பனில் நடைபெறவுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து நிர்வாகக் குழுவான யு.இ.எஃப்.ஏ. அறிவித்துள்ளது. காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் வழக்கமாக நடக்கும் இரண்டு போட்டிகளுக்குப் பதிலாக ஒரே போட்டியாக நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்ஸாண்டர் செஃபெரின் பேசுகையில், ''ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படும். இருப்பினும், தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. ஜனவரியின் தொடக்கத்திலிருந்து நிலைமையை மதிப்பிடுவோம். யுஇஎஃப்ஏ சார்பாக நிலைமையை கண்காணித்து வந்தாலும் போர்ச்சுகலில் சுகாதார நிலைமை மோசமடைந்துவிட்டால், போட்டிகளை நடத்துவதற்கான மாற்றும் திட்டம் எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.