இங்கிலாந்து உள்ளூர் அணிகளுக்கான எஃப்.ஏ. கோப்பைக் கால்பந்துத் தொடரின் 139ஆவது சீசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் டோட்டன்ஹாம் அணி (Tottenham), நவ்ரிச்(Norwich) அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் பேனால்டி ஷூட் அவுட் முறையில், நவ்ரிச் அணி 3-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தியது. அதன்பின் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது டோட்டன்ஹாம் அணியைச் சேர்ந்த மிட் ஃபீல்டர் எரிக் டையர், ரசிகர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வீரருடன் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு அறிவித்தது. இந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எஃப்.ஏ. கோப்பைத் தொடரின் போது டோட்டன்ஹாம் அணியைச் சேர்ந்த மிட் ஃபீல்டர், அச்சுறுத்தலான வகையில் ரசிகரைத் தாக்க முற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து மே 8ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோட்டன்ஹாம் அணியின் மேலாளர் ஜோஸ் மவுரினோ கூறுகையில், 'விளையாட்டு வீரர்கள் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், நான் எரிக்கிற்கே ஆதரவாக நிற்பேன். ஏனெனில், அந்நபர் எரிக்கை அவமதிக்கும் விதமாக மைதானத்தில் நடந்துகொண்டார். மேலும் அங்கு எரிக்கின் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். அதனால் தான், எரிக் அவ்வாறு நடந்து கொண்டார். இதனால் கூட்டமைப்பு சார்பில் எரிக்கிற்குத் தடை ஏதும் விதிக்கப்படாது என நான் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஐரோப்பிய மகளிர் சாம்பியன்ஷிப் தொடர் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!