இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. நட்சத்திர ஸ்டிரைக்கரான இவர் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டில் அறிமுகமானார். அன்று தொடங்கிய இவரது பயணத்தில் குறிப்பிட்ட சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் தற்போதைய கால்பந்து வீரர்களில் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் இந்திய அணிக்காக கால்பந்து போட்டிகளில் களமிறங்கி 15 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக இந்திய கால்பந்து சம்மேளனம் தனது ட்விட்டர் பக்கத்தில் #15YearsOfSC11 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளது.
தற்போது அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய அணிக்காக இதுவரை 115 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 72 கோல்களை அடித்துள்ளார்.