அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் எழுந்த போராட்டம் காரணமாக உலகம் முழுவதும் இனவெறி தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளன. அனைத்து தரப்பு நட்சத்திரங்களும் இனவெறிக்கு எதிராகத் தங்களது எதிர்வினையை ஆற்றினர்.
தற்போது இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி இனவெறி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''இனவெறி எவ்வாறு என்னை பாதிக்குமோ அதே அளவிற்குத்தான் அனைவரையும் பாதிக்கும். இனரீதியாகத் துன்புறுத்துவது பெரும்பாலானோருக்குத் தவறு என்பது தெரியவில்லை.
இனவெறியுடன் உள்ளவர்களிடம் நான் சென்று உரையாடினால், அவர்களுக்கு இனவெறி என்பது தவறு என்பதைப் புரியவைத்தால் நிச்சயம் அவர்கள் மீண்டும் யாரையும் இனரீதியாகத் துன்புறுத்த மாட்டார்கள்.
சாதி, மதம், இனம், மொழி, நிறம் என யாரையும் குறைப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. சமூகத்தில் உள்ள இனவெறியை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்குக் கல்வியும், தொடர் விழிப்புணர்வும் அவசியம்'' என்றார்.