கால்பந்து போட்டியில் 12 வினாடிகளில் கோல் அடித்த ஒரே இந்திய வீரர் விஜயன் மட்டுமே. தெற்கு ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பாக நடைபெற்ற தொடரில் பூட்டான் அணிக்கு எதிரான பன்னிரண்டே வினாடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தவர் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் விஜயன்.
வாழ்க்கையின் தொடக்க காலத்தில் திரிச்சூர் முனிசிபல் மைதானம் முன்பு சோடா பாட்டில்களை விற்றுவந்த இவருடைய கால்பந்து திறமையை கேரள காவல்துறை தலைவர் ஜோசப் அடையாளம் கண்டு, போலீஸ் அணியில் விளையாட வைத்தார். 17 வயதில் போலீஸ் அணிக்கு ஆடுவது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு கேரள போலீஸ் அணிக்காக ஒரு போட்டியில் ஆடியபோது, இவரது அதிரடியான தாக்குதல் ஆட்டத்தைப் பார்த்து அசந்துபோன தேசிய தேர்வுக் குழுவினர் அப்போதே இவர் மீது ஒரு கண் வைத்துக் கொண்டனர்.
1989ஆம் ஆண்டு சர்வதேச அணிக்காக தேர்வு செய்யப்பட்ட விஜயன், நேரு கோப்பை, உலகக்கோப்பை தகுதிச் சுற்று, ஒலிம்பிக் தகுதிச் சுற்று, சஹாரா கோப்பை, தெற்கு ஆசிய கால்பந்து சம்மேளனத் தொடர் என பல்வேறு போட்டிகளில் ஆடி மிகப்பெரிய அனுபவத்துடனும், தோல்விகளுடனும் திரும்பினார்.
1991ஆம் ஆண்டுவரை கேரள போலீஸ் அணிக்காக ஆடி வந்தவர், பின்னர் கொல்கத்தாவின் பிரபல கால்பந்து கிளப் அணியான மொகன் பகான் அணிக்கு மாற்றமைடைந்தார்.
அப்போது மொகன் பகான் கிளப் ஆசியாவிலேயே மிகப் பழைமை வாய்ந்த அணி என்ற புகழோடு வலம் வந்துகொண்டிருந்தது. கொல்கத்தாவில் கால்பந்து விளையாட்டு பெரிய அளவில் பிரபலமடைய முக்கிய காரணமும் மொகன் பகான் அணியே.
இதனைத் தொடர்ந்து விஜயன் பல்வேறு கிளப் அணிகளுக்கு ஆடினார். இந்தியாவுக்காக சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை 1993, 1997, 1999 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார். இவரது கால்பந்து வாழ்க்கையில் மணிமகுடமாய் அமைந்த போட்டிதான் பூட்டான் அணிக்கு எதிராக 12 வினாடிகளில் கோல் அடித்தது!
பின்னர் 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட விஜயன், 2003ஆம் ஆண்டு இறுதிவரை கேப்டனாக விளையாடினார்.
இதுவரை இந்தியாவுக்காக 79 சர்வதேச போட்டிகளில் 40 கோல்களை அடித்துள்ளார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய தொடரோடு ஓய்வு பெற்ற விஜயன், அதனையடுத்து கேரளாவில் கால்பந்து பயிற்சி மையம் தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
சமீபத்தில் சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள், ஒரு காவல் அதிகாரியுடன் செல்ஃபி எடுத்து பதிவிட்டு வந்தனர். அவர் யார் என்று பார்த்தால், நம் தமிழ் சினிமாவில் திமிரு, கொம்பன், கெத்து உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்தான் விஜயன்.
இந்திய கால்பந்து அணிக்கு முகம் கொடுத்தவர். இவருக்காகவே கால்பந்து ஆட்டங்களை கவனித்தவர்களும் உண்டு. இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று எழுத்தாளர்களை மதிக்காதது மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கொடுக்காததும்தான்.
இவர் ஆடிய காலங்களில் மலேசியா, தாய்லாந்து அணிகள் இவரை அழைத்தன. அந்த அழைப்பை ஏற்று அப்போது செல்லாத விஜயன், தற்போது கேரளாவில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஒருவேளை அந்த 12 வினாடிகளில் இவர் கோல் போடவில்லை என்றால், விஜயனும் நம் கண்ணுக்கு மற்ற வீரர்களைப்போல் காணாமல் போயிருப்பார். ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கேரளா அணி ஆடிய இறுதி போட்டியில் இவருக்கு சிறப்பு டிக்கெட்டுகள் வழங்காமல் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயன்! அன்று உங்களைப் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு ஆடியதால்தான் இன்று இந்திய கால்பந்து அணி சர்வதேச அளவில் தலைநிமிரத் தொடங்கியுள்ளது.