ஆடவர்களுக்கு நடத்தப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பாணியில், மகளிருக்கான கால்பந்து தொடர் இந்திய மகளிர் கால்பந்து லீக் என்ற பெயரில் 2017ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவருகிறது. இதன் நான்காவது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கொகுலம் கேரள அணி, நடப்பு சாம்பியனான சேது மதுரை அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 21ஆவது நிமிடத்தில் கேரள வீராங்கனை மனிஷா கல்யான் கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதைத்தொடர்ந்து, கொகுலம் கேரள அணியின் நட்சத்திர வீராங்கனையான சபித்ரா பந்தாரி 44ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் கோல் ஸ்கோரை இரண்டாக்கினார்.
முதல் பாதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த சேது மதுரை அணி இரண்டாம் பாதியில் கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 84ஆவது நிமிடத்தில் மீண்டும் சபித்ரா பந்தாரி கோல் அடித்து மிரட்ட, கொகுலம் கேரள அணி 3-0 என்ற கோல் கணக்கில் சேது மதுரை அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கொகுலம் கேரள அணி, மனிப்பூரின் கிரிப்ஷா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். கால்பந்து: ராய் கிருஷ்ணா ஹாட்ரிக், ஃபிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்திய ஏடிகே!