போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ கால்பந்து அரங்கில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். ஸ்போர்டிங் சி.பி (போர்ச்சுகல்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) உள்ளிட்ட பிரபல கால்பந்து கிளப் அணிகளில் விளையாடிய இவர் தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இத்தாலியின் புகழ்பெற்ற யுவென்டஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்.
இந்த நிலையில், டூரின் நகரில் நேற்று நடைபெற்ற சீரி ஏ கால்பந்து தொடரின் லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் காக்லியரி அணியை வீழ்த்தியது. இதில், சிறப்பாக விளையாடிய ரொனால்டோ ஹாட்ரிக் கோல் (ஆட்டத்தின் 49, 67, 81ஆவது நிமிடங்களில் கோல்) அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் மூலம், சீரி ஏ கால்பந்துத் தொடரில் தனது முதல் ஹாட்ரிக் கோலை பதிவு செய்து அசத்தினார். இதுமட்டுமின்றி, இங்லிஷ் ப்ரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ போன்ற மூன்று லீக் போட்டிகளிலும் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். கிளப் போட்டிகளில் 47 ஹாட்ரிக் கோல்களும், சர்வதேச போட்டிகளில் ஒன்பது ஹாட்ரிக் கோல்களும் என மொத்தம் 56 ஹாட்ரிக் கோல்களை அவர் அடித்துள்ளார். 34 வயதான இவர், நடப்பு ஆண்டில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: 2019 Football: மெஸ்ஸி, இந்தியன் ஃபிபா தாத்தா, என ரசிகர்களின் உணர்வுகள் நிரம்பிய தருணங்கள்!