கரோனா பெருந்தொற்றினால் இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் உள்பட அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது பொழுதைக் கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஃபேஸ்புக் வாயிலாக வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமிம் இக்பாலுடன் நேரலையில் பங்கேற்றார். அப்போது இருவரும் பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியைப் பற்றியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவை பற்றியும் பேசத் தொடங்கினர்.
ரொனால்டோவை பற்றி உங்கள் கருத்து என்ன, என்ற இக்பாலின் கேள்விக்குப் பதிலளித்த ரோஹித் சர்மா, ”யாருக்குத் தான் ரொனால்டோவை பிடிக்காது? அவர் கால்பந்தாட்டத்தின் அரசன். கால்பந்தில் நிரந்தர இடத்தைப் பிடித்தவர். அதற்காகவே அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.
ஏனெனில், அவர் இவ்விளையாட்டிற்குள் வந்த பின்னணியை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த இடத்தைப் பிடிப்பதற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளார். அனைத்துச் சாதனையாளர்களும் தங்களது தொடக்கம் முதல் இறுதி வரை பல்வேறு வகையான கஷ்டங்களைச் சந்தித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்” என்றார்.
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப் பிரபலமான கால்பந்து வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் (99) உள்ளார்.
இதையும் படிங்க:பன்டேஸ்லிகா: ஷால்கே அணியை வீழ்த்தி டார்ட்மண்ட் அபார வெற்றி!