பிரான்ஸில் நடைபெற்றுவரும் கால்பந்து லீக் தொடரில் மார்சேய் - பாரிஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மார்சேய் அணி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பாரிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் பாரிஸ் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் உள்பட ஐந்து பேருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மார்சேய் அணியைச் சேர்ந்த கோன்சலஸ் என்ற வீரரை அவர் அடித்ததால் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில், எதிரணி வீரர் நிறவெறி குறித்த இழிசொல்லைப் பயன்படுத்தியதாலேயே அவரை அடித்ததாக நெய்மர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நேற்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என்னைப் புண்படுத்திய ஒருவரை (கோன்சலஸ்) அடித்ததால் எனக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
போட்டியை வழிநடத்துபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்ததால், நான் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
எங்கள் விளையாட்டில், ஆக்ரோஷம், அவமதிப்புகள், சத்தியம் செய்வது என அனைத்துமே விளையாட்டின் ஒரு பகுதியாகும். எனவே அவரை (எதிரணி வீரர்) என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது, அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதிதான். ஆனால் இனவெறி குறித்த சொற்களையும் சகிப்பின்மையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் கறுப்பினத்தைச் சேர்ந்தவன், கறுப்பினத்தவரின் மகன், பேரன். இதனால் நான் பெருமை கொள்கிறேன். என்னைப் பிறரிடமிருந்து நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. நேற்று (செப்.15), விளையாட்டின் பொறுப்பாளர்கள் (நடுவர்கள், உதவியாளர்கள்) தங்களைப் பாரபட்சமின்றி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளை இனிமேல் அனுமதிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் விரும்பினேன்.
நான் அதைப் புறக்கணித்திருக்க வேண்டுமா என்று எனக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இன்று, நான் அதைப் புறக்கணித்திருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். அந்த நேரத்தில், என் அணியினரும் நானும் இது குறித்து நடுவர்களிடம் முறையிட்டோம். ஆனால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம்.
நான் எனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதேபோல் அவரும் (எதிரணி வீரர்) தண்டிக்கப்பட வேண்டும். இனவெறி இங்கு உள்ளது. ஆனால் அதை நாம்தான் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்,
ஆனால், நெய்மரின் இந்தக் குற்றச்சாட்டுகளை எதிரணி வீரர் கோன்சலஸ் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய ஒசாகா!