உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இத்தொடரில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த ஆண்டு நடைபெற்றன.
பின்னர் கரோனா அச்சுற்றுத்தல், ஊரடங்கு காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. இதில், இந்திய கால்பந்து அணி எதிர்கொள்ள இருந்த தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய அணிக்கான ஒத்திவைக்கப்பட்ட உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்து கத்தார் நாட்டில் நடைபெறும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளை மீண்டும் நடத்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஆர்வம் காட்டிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக குரூப் இ பிரிவிலுள்ள இந்தியா, கத்தார், ஓமன், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டிகளை கத்தாரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்போட்டிகள் வரும் மே 31ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதிக்குள் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடர் தகுதிச்சுற்று குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, 3 புள்ளிகளை மட்டும் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் கிரிக்கெட்: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய மிதாலி ராஜ்!