உலகத்தையே அச்சறுத்தி வரும் கொரோனா வைரஸால் கால்பந்து, டென்னிஸ், ரக்பி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக், லா லிகா, பண்டஸ் லிகா உள்ளிட்ட கால்பந்துத் தொடரின் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மான்செஸ்டர் சிட்டி - ஆர்சனல் அணிகளுக்கு இடையே இன்று மான்செஸ்டரின் எதியாட் மைதானத்தில் நடைபெறவிருந்த, இங்கிலீஷ் ப்ரீமியர் கால்பந்து தொடரின் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டி எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணி 28 போட்டிகளில் 18 வெற்றி, மூன்று டிரா, ஏழு தோல்வி என 57 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், ஆர்சனல் அணி 28 போட்டிகளில் ஒன்பது வெற்றி, 13 டிரா, ஆறு தோல்வி என 40 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனாவால் 631 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஏப்ரல் 2ஆம் தேதி வரை, சீரி ஏ கால்பந்துப் போட்டிகள் எதுவும் நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடருக்குத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு