கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2019-20ஆம் ஆண்டிற்கான இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரும் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு வைரஸின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் என 1,213 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனையின் முடிவில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து பிரீமியர் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த எட்டாம் தேதி பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் என 1,213 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் முடிவில் ஒவ்வொருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என அதில் தெரிவித்துள்ளனர்.
இதனால் மான்செஸ்டர் யுனைடெட் - ஸ்டோக் சிட்டி அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.