போர்ச்சுகல் கால்பந்து லீக் தொடரான பிரீமியரா லிகா கால்பந்து தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் போர்ட்டோ அணியை எதிர்த்து விட்டோரியா எஸ்.சி. அணி விளையாடியது.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 10ஆவது நிமிடத்தில் போர்ட்டோ அணியின் டக்லஸ் ரெனெட்டோ 10ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து வேறு எந்த கோல்களும் அடிக்கப்படாத நிலையில் முதல்பாதி முடிவடைந்தது. பின்னர் இரண்டாம் பாதியின் 49ஆவது நிமிடத்தில் விட்டோரியா அணியின் ப்ரூனோ கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக போர்ட்டோ அணியின் மொவுசா மரேகா 60 நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.
கோல் அடித்த மகிழ்ச்சியில் ரசிகர்களைப் பார்த்து மொவுசா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் மொவுசா மீது கருப்பு சேர்களை வீசியெறிந்து நிறவெறியை வெளிப்படுத்தினர்.
இதனால் கோபமடைந்த மொவுசா களத்திலிருந்து வெளியேற முயன்றார். இவரைத் தடுக்க அனைத்து வீரர்களும் முயற்சித்தனர். ஆனால் மொவுசா களத்திலிருந்து வெளியேறினார். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதோடு, ரசிகர்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டது.
இறுதியாக போர்ட்டோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. நிறவெறியால் கால்பந்து வீரர் வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டி20 தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்த இங்கிலாந்து!