பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான பீலே, கால்பந்து உலகின் ராஜாவாக திகழ்ந்தவர். பிரேசில் அணியின் அடையாளமாக விளங்கிய பீலே, மூன்று முறை (1958, 1962, 1970) உலகக்கோப்பையை வென்று தந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர். இவர் ஆயிரத்து 281 கோல்களை அடித்து உலக சாதனையும் படைத்துள்ளர். அதில் பிரேசில் அணிக்காக அடித்த 77 கோல்கள் (91 போட்டிகள்) அடங்கும்.
கால்பந்து போட்டியில் ஓய்வு பெற்ற பின் அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றுவந்தார். இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட புற்றுநோய்த் தொற்று காரணமாக இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறினார்.
அதன்பின் பீலேவை பொது வெளியில் பார்ப்பது அரிதான ஒன்றாக மாறியது. இருப்பினும் இவர் கடைசியாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாரிஸில் நடைபெற்ற ஒரு விளம்பரப் போட்டிக்கு வருகை தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் சிறுநீரக பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே தற்போது 79 வயதாகும் பீலேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது மகன் எடின்ஹோ தெரிவித்துள்ளார். மேலும், கால்பந்து உலகில் ராஜாவைப் போன்று இருந்த எனது தந்தை தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் மனதளவில் அதிகமாக உடைந்து போயுள்ளார். பிறரின் துணையில்லாமல் அவரால் நடக்க முடியாது என்பதால், பீலேவை இனி வெளியே பார்ப்பது கடினம் என்றும் அவர் கூறினார்.