இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான ஐஎஸ்எல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று (பிப்.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய ஜாம்ஷெட்பூர் அணிக்கு போரிஸ் சிங் மூலம் 72ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் டேவிட் கிரண்ட் மூலம் மீண்டுமொரு கோல் கிடைக்க ஜாம்ஷெட்பூர் அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்டது.
இறுதிவரை போராடிய மும்பை சிட்டி அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க: பன்டெஸ்லிகா: ஆர்மீனியா பீல்ஃபெல்ட்டை வீழ்த்திய உல்ஃப்ஸ்பெர்க்!