பார்சிலோனா: பார்சிலோனா அணிக்காக 500ஆவது முறையாகவும், அனைத்து வகை கிளப் போட்டிகளில் 750ஆவது ஆட்டத்திலும் களமிறங்கியுள்ளார் அர்ஜெண்டினா அணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி.
லா லிகா கால்பந்து லீக் தொடரில் ஹூயூஸ்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியபோது இந்த சாதனையை புரிந்துள்ளார் மெஸ்ஸி. அனைத்து வகை கிளப் தொடர்களில் சேர்த்து 750ஆவது ஆட்டமாக இந்தப் போட்டி அவருக்கு அமைந்தது.
பார்சிலோனா அணிக்காக 500 போட்டிகளில் விளையாடிய ஸ்பெயின் நாட்டைச் சேராத வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்தச் சிறப்பு மிக்க போட்டியில் அவர் கோல் அடிக்கவில்லை என்றாலும், அணியின் மற்றொரு வீரரான ஃப்ரென்கி டி ஜாங் கோல் அடிப்பதற்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். இதன் மூலம் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.
இதற்கு முன்னர் ஈபர் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை.
இதைத்தொடர்ந்து ஹூயூஸ்கா அணிக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் களமிறங்கி தனது அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஸாவி அதிகபட்சமாக பார்சிலோனா அணிக்காக 767 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது 17 போட்டிகளில் அவரிடமிருந்து மெஸ்ஸி பின்தங்கியுள்ளார்.
லா லிகா லீக் தொடரில் இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள பார்சிலோனா அணி 28 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது அடுத்த போட்டியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் விளையாடுகிறது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்:புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஏடிகே மோகன் பாகன்!