யு-18 கோல் கீப்பராக காஷ்மீரைச் சேர்ந் முஹீத் ஷபீக் கான் சென்ற ஆண்டு கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் ரிசர்வ் அணியிலும், தற்போது மெய்ன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிலும் அவர் இடம்பிடித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை நடக்கவுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோவாவில் உள்ள மூன்று மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரள அணியில் இடம் பிடித்தது பற்றி முஹீத் கூறுகையில், ''கேரளா பிளாஸ்டர்ஸ் மெய்ன் அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு ஐஎஸ்எல் சீசனில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அதில் பங்கேற்பதற்கான வேலை இன்னும் முடியவில்லை. அணியில் கோல் கீப்பர் இடத்திற்கு பல வீரர்கள் உள்ளனர். அனைவரும் உலகத் தரம் மிக்க கோல் கீப்பர்கள். நிச்சயம் அணியில் இடம்பிடிக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் ப்ளேயிங் அணியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். ஐந்து வருட ஒப்பந்தத்தில் ஒரு வருடத்திலேயே மெய்ன் அணியில் இடம்பிடித்துவிட்டேன். எனது திறன் மீதான நம்பிக்கை, எனது பயிற்சியாளர்கள் மீதான நம்பிக்கைகள் என்னை முன்னகர்த்திச் செல்லும்” என்றார்.
முஹீத்திற்கு கால்பந்து மீதான ஆர்வம் தன் தந்தையிடம் இருந்தே வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேசிய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றவர் தான் ஷபீர் ஹூசைன். சர்வதேச தரத்திலான கோல் கீப்பர் என அவர் இன்றளவும் புகழப்படுகிறார். இந்நிலையில், ஆறு வயதில் தொடங்கிய முஹீத்தின் கால்பந்து ஆட்டம், அவரை கேரளா பிளாஸ்டர்ஸ் வரை கொண்டு வந்துள்ளது.
கேரளா பிளாஸ்டர்ஸுக்கான யு-18 அணியில் இடம்கொடுத்தது இஷ்ஃபக் என்பவர் தான். இஷ்ஃபக் மற்றும் மெஹ்ராஜ் ஆகிய இருவர் தான் இதற்கு முன்னதாக காஷ்மீரில் இருந்து ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்றவர்கள்.
இதையடுத்து முஹீத்திற்கு 30 நாள்கள் பயிற்சி வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்வில் தேர்வாளர்களையும், கோல் கீப்பர்களுக்கான பயிற்சியாளரையும் முஹீத் வெகுவாக ஈர்த்துள்ளார். இந்நிலையில், முஹீத்தை ஐந்து வருடங்களுக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட அவலம் : கொந்தளிப்பில் ரசிகர்கள்!