அர்ஜென்டினா: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா விரைவில் வீடு திரும்புவார் என அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மரடோனாவுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் லியோபோல்டோ லுக் கூறியதாவது:
'மரடோனாவுக்கு மூளைப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு, அதைச் சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சப்டுரல் ஹீமாடோமாவை (ரத்தக் கட்டி) நீக்கியதில், அவரது நரம்பு மண்டலங்களில், அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது அவர் நன்கு தேறி வருகிறார். உடல் நிலை முன்னேற்றம் அடைவதைக் கண்டு, அவர் வியப்பில் உள்ளார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்' என்றார்.
கடந்த வாரம் 60 வயதை எட்டிய மரடோனா உடலில் நீரிழப்பு, ரத்த சோகை மற்றும் மனச்சோர்வு காரணமாக நவ. 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உணவு உண்பதற்கு விருப்பம் இல்லாமல், தவிர்த்து வந்ததாக நண்பர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், அவரது கால்பந்து கிளப் அணியின் ஆட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை காண சென்ற கால்பந்து ஜாம்பவான் மரடோனா மிகவும் பலவீனமாகவே காணப்பட்டார். அந்தப் போட்டியை காண வந்தபோது நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட அவர், போட்டியின் முதல் பாதியிலேயே வெளியேறினார். அப்போதே மரடோனாவின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: அங்கீகாரம் கிடைக்காத வீரர் சந்தீப் ஷர்மா: பிராட் ஹாக் ட்வீட்