ஓய்வுபெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் உடல்நிலை அவ்வளவு மோசமாக இல்லை என்றும், சரியாக சாப்பிடாததால்தான் அவரது உடல் பலவீனமடைந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும், அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லியோபோல்டோ லுக் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மரடோனா மன ரீதியான குழப்பங்களை அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்க்கொண்டு வருவதாக லியோபோல்டோ லுக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு டியாகோ நலமுடன் இருந்தார். நாங்கள் அவருடன் நடனமாடவும் செய்தோம். ஆனால், தற்போது அவர் சில மனரீதியான குழப்பங்களில் உள்ளார். மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்றால், மரடோனா விரைவாக குணமடைவார் என நம்புகிறோம். அதற்கு சில நாள்கள் மருத்துவமனையில் அவர் தங்க வேண்டியுள்ளது. இது அவரின் உடல்நலனுக்காக எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகும்" எனத் தெரிவித்தார்.