லண்டன்: இங்கிலீஷ் ப்ரீமியர் கால்பந்து சீசனில் லிவர்பூல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.
நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆன்ஃபீல்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி, லிவர்பூல் அணியை எதிர்கொண்டது.
தனது சொந்த மைதானத்தில் விளையாடிய லிவர்பூல் அணி, ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் நடுகள வீரரான ஃபாபினோ கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். பின் 13ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஃபார்வர்ட் வீரர் முகமது சலாஹ் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
லிவர்பூல் அணியின் அட்டாக்கிங் ஆட்டத்துக்கு மான்செஸ்டர் சிட்டி அணியால் பதில் கொடுக்க முடியவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி கம்பேக் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் பாதி தொடங்கிய ஏழு நிமிடங்களிலேயே லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரான மானே ஹெட்டர் முறையில் கோல் அடித்து மிரட்டினார். மறுமுனையில் மான்செஸ்டர் சிட்டி வீரர் பெர்னார்டோ சில்வா 78ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில், லிவர்பூல் அணி இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன் மூலம், அந்த அணி இந்த சீசனில் விளையாடிய 12 போட்டிகளில் 11 வெற்றி, ஒரு டிரா என 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணி 12 போட்டிகளில் எட்டு வெற்றி, மூன்று தோல்வி, ஒரு டிரா என 25 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.