மைதானத்தில் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் தங்களது இரு கைகளையும் ஒரே நேரத்தில் தூக்கியவாறு தட்டினால் அதில் வரும் சத்தத்தின் பெயர்தான் 'வைக்கிங் கிளாப்' (Viking Clap). 2016இல் யூரோ கால்பந்து தொடரில் ஐஸ்லாந்து ரசிகர்கள் மூலம் இந்த வைக்கிங் கிளாப் செலிபிரேஷன் கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து, இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரிலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பெராக் - கேதாஹ் அணிகளுக்கு இடையிலான மலேசிய எஃப் ஏ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மைதானத்தில் இருந்த 83,520 ரசிகர்கள் ஒரே நேரத்தில் வைக்கிங் கிளாப் செய்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
இதன்மூலம், இந்த வைக்கிங் கிளாப் மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளது என்று மலேசிய கால்பந்து எஃப் ஏ லீக் தனது அதிகார்வபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இறுதியில் கெதாஹ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, இணையதளத்தில் வெளியான இந்த வீடியோ வைரலாகி வருவதோடு மட்டுமின்றி காண்போரின் கண்களை மிகவும் கவர்ந்துள்ளது.