ஆப்பிரிக்கா கப் ஆஃப் நேசன்ஸ் குவாலிபயர் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலாவுக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
டோகோ, எகிப்து அணிகளுக்கிடையேயான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து வெற்றிபெற்றது. கரோனா தொற்று காரணமாக, முகமது சாலா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. முன்னதாக, அவருக்கு கரோனா தொற்று இருந்தது, இதற்கிடையே அவரின் மூக்கிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அப்போது, தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் அர்செனல் அணிக்காக விளையாடும் முகமது எல்னேனிக்கும் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து சாலா தனது டவிட்டர் பக்கத்தில், "என்னை ஊக்கப்படுத்தும்விதமாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துகள். விரைவாக, களத்திற்கு வந்து விளையாடுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக விளையாடும் சாலா, இந்தாண்டு தொடரில் எட்டு கோல்களை அடித்துள்ளார். கரோனா தொற்று காரணமாக லிவர்பூல் அணி ஆடும் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.