ஜெர்மன் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான பன்டஸ்லிகா தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.25) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி, ஐன்ட்ராச் ஃபிராங்ஃபேர்ட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பெயர்ன் முனிச் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணியின் ராபர்ட் ஆட்டத்தின் 10 ஆவது, 26 ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடிய ராபர்ட், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து ஹாட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.
பின்னர் பெயர்ன் முனிச் அணியின் லெராய் சேன், ஜமால் முசியாலா ஆகியோரும் கோலடிக்க அணியின் வெற்றி உறுதியானது. இறுதி வரை போராடிய ஐன்ட்ராச் ஃபிராங்ஃபேர்ட் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க இயலவில்லை.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஐன்ட்ராச் ஃபிராங்ஃபேர்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியினால் பன்டஸ்லிகா புள்ளிப்பட்டியலிலும் 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்கு!