கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே பார்வையாளர்களின்றி ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்துத் தொடர் நடந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடரும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பார்வையாளர்களின்றி நடைபெற்ற இத்தொடரின், கடந்த சனிக்கிழமை (ஜூன் 13) பார்சிலோனா எஃப்சி - ரியல் மல்லோர்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் இரண்டாம் பாதியில், பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸியுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் களத்தில் புகுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பார்வையாளர்களின்றி நடத்தப்படும் இந்தப் போட்டியில் ரசிகர் ஒருவர் எப்படி களத்தில் புகுந்தார் என்ற கேள்வியும் விவாதப் பொருளானது.
இதனையடுத்து அந்நபர் பாதுகாப்பு அலுவலர்களால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்நிலையில் மைதானத்தில் நுழைந்த நபர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கும்படி லா லிகா கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "லா லிகா இந்த வகை நடத்தைக்கு முழுமையான கண்டனத்தை காட்டுகிறது. மேலும் இது மற்றவர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தும் செயலாகும். அதுமட்டுமில்லாமல் இச்செயல் போட்டியின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் அபாயங்களையும் கொண்டுள்ளது. எனவே, களத்தில் நுழைந்த நபர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என லா லிகா குறிப்பிட்டுள்ளது.