கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்படிருந்தன. தற்போது உலகம் முழுவதும் இப்பெருந்தொற்று சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டு வருவதால், அந்நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து பன்டெஸ்லிகா, கே-லீக் உள்ளிட்ட கால்பந்து தொடர்கள் பார்வையாளர்களின்றி சில தினங்களுக்கு முன்பாக தொடங்கின. இதையடுத்து, ஸ்பெயின் நாட்டின் மிக முக்கிய கால்பந்து தொடரான லா லிகா தொடர் எப்போது நடைபெறும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ், லா லிகா தொடரை ஜூன் 8ஆம் தேதி நடத்திக்கொள்ளும் படி லா லிகா கூட்டமைப்பிற்கு அனுமதியளித்திருந்தார். இதற்கிடையில், அக்கூட்டமைப்பின் தலைவர் ஜேவியர் டெபாஸ் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், லாலிகா தொடரை ஜூன் 11ஆம் தேதியிலிருந்து நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டெபாஸ், ‘ஜூன் 11ஆம் தேதி முதல் லா லிகா தொடரை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெறவுள்ள தொடரானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என நம்புகிறோம். இத்தொடரின் முதல் போட்டியானது கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மக்களுக்காக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாரத்திற்குள்ளாகவே முதல் நான்கு போட்டிகளுக்கான மைதானங்கள் மற்றும் தேதிகளை முடிவு செய்யவுள்ளோம். மேலும் ஒரு வாரத்தில் மூன்று போட்டிகளையாவது நடத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்!