அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் மரடோனா 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, உலகக்கோப்பையை வென்றார். அந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த கோல், இன்றுவரை ஆல் டைம் சிறந்த கோலாக ரசிகர்களால் கூறப்படுகிறது.
இவர் கடந்த புதன்கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள இவரின் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் இந்தியாவுக்கு இருமுறை வந்துள்ளார். ஒருமுறை கொல்கத்தாவுக்கும், ஒருமுறை கேரளாவுக்கு வருகை புரிந்துள்ளார். அந்த நேரத்தில் கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் உள்ள ப்ளூ நைல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் அந்த ஹோட்டலில் 309ஆம் அறையில் தங்கியதையடுத்து, அந்த அறையின் பெயர் மரடோனா சூட் என மாற்றப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அந்த ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் ரவீந்திரன் கூறுகையில், '' 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மரடோனா வந்தபோது இரண்டு நாள்கள் இந்த அறையில் தங்கினார். அப்போது அவர் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டது. இப்போது அவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
அந்த நேரத்தில் எங்களுக்கு மரடோனா வருவதாக கூறப்படவில்லை. எங்களிடம் விவிஐபி ஒருவர் வருகிறார் என்றே தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்கள் அறையில் ஒரு சில மாற்றங்களை செய்யுமாறு கூறினர். அதனை நாங்கள் செய்தோம். பின்னர்தான் மரடோனா தங்குவதாக எங்களிடன் தெரிவித்தனர். பின்னர் ஒரு ரசிகராக மாறி, அவர் மகிழ்ச்சியாக தங்க வேண்டும் என்று ஏராளமான ஏற்பாடுகளை செய்தோம். இங்கு பரிமாறப்பட்ட மீன், இறால் வகைகளை ருசி பார்த்தார். அவருக்கு அது பிடித்திருந்தது'' என்றார்.
இதையும் படிங்க: 'என்னை மன்னித்துவிடுங்கள் ராகுல்' - வைரலாகும் மேக்ஸ்வெல் ட்வீட்