யுவென்டஸ் (இத்தாலி) - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து) கிளப் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.
இதில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், டோடட்ன்ஹாம் அணியின் கேப்டன் ஹாரி கேன், ஆடுகளத்தின் நடு பகுதியில் இருந்து தனது வலது காலால் ஓரே ஷாட்டில் அடித்த பந்து, கோல் கீப்பரைத் தாண்டி பந்து நேராக கோலுக்கு சென்றது. ஹாரி கேனின் இந்த மேஜிக் கோலால் டோட்டன்ஹாம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை வீழ்த்தியது.
போட்டி முடிவடைந்த பிறகு, இந்த கோல், "என் வாழ்நாளில் அடித்த தலைச்சிறந்த கோல்களில் இதுவும் ஓன்று. எதிரணி கோல் கீப்பர் லைனை தாண்டி வருவதைத் தெரிந்துக் கொண்டபிறகே இந்த ஷாட்டை அடித்தேன்" என்றார். ஹாரி கேனின் மிரட்டலான இந்த கோல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, டோட்டன்ஹாம் வீரர் எரிக் லாமேலா 30ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய யுவென்டஸ் அணி 56ஆவது நிமிடத்தில், ஹியூகெய்ன் கோலடித்து அசத்தினார். ஆட்டம் 1-1 என்ற சமநிலைக்கு வந்த பிறகு, யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ களமிறங்கினார். அவர் வந்த நான்காவது நிமிடத்திலேயே கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் இதற்கு பதிலடி தரும் வகையில், டோட்டன்ஹாம் வீரர் லூகாஸ் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இறுதியில், ஹாரி கேனின் உதவியால் டோட்டன்ஹாம் 3-2 என்ற கணக்கில் யுவென்டஸ் அணியை அப்செட் செய்தது. இதைத்தொடர்ந்து டோட்டன்ஹாம் அணி தனது அடுத்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வரும் 25ஆம் தேதி எதிர்கொள்கிறது.