இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஆறாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதலாவது அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் நேற்று மோதின.
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி நான்கு கோல்கள் அடித்து அபார வெற்றிபெற்றது.
போட்டியின் தொடக்கம் முதல் இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தி விளையாடிவந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் களமிறங்கின.
இதையடுத்து ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் லூசியன் கோலன் சென்னை அணிக்கு முதல் கோல் பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து அனிருத் தப்பா 61ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்க, சென்னை அணி வலுவான நிலையை எட்டியது.
மறுமுனையில் எஃப்சி கோவா அணியினர் கோல்களைப் பெறுவதற்கு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 77ஆவது நிமிடத்தில் எலி ஷபியா, 79ஆவது நிமிடத்தில் லாலியன்ஸுவலா சிஹாங்டே என அடுத்தடுத்து சென்னை அணிக்கு கோல்களைப் பெற்றுத்தர நான்கு கோல்களுடன் முன்னிலைப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் 60 விழுக்காடு வரை பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது எஃப்சி கோவா, கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. போட்டி முடிவதற்கு 5 நிமிடம் முன்பு கோவா அணியின் சேவியர் காமா தனது அணிக்கு ஒரு வழியாக முதல் கோல் அடித்தார்.
இருப்பினும் முழு ஆட்ட நேர முடிவில் 4-1 என்ற கணக்கில் சென்னை அணி கோவா அணியை அரையிறுதி முதல் லெக் ஆட்டத்தில் வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் லெக் அரையிறுதி ஆட்டம் மார்ச் 7ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது.
இதேபோல் இரண்டாம் அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் ஆட்டம் பெங்களூரு எஃப்சி - அத்லடிகோ கொல்கத்தா அணிகளுக்கிடையே மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா போட்டியின் துளிகள்
பந்து கட்டுப்பாடு
சென்னை - 40 விழுக்காடு
கோவா - 60 விழுக்காடு
ஃபவுல்கள்
சென்னை - 14
கோவா - 11
கார்னர்கள்
சென்னை - 7
கோவா - 6
ஷாட்டுகள்
சென்னை - 8
கோவா - 14
டார்கெட் ஷாட்டுகள்
சென்னை - 6
கோவா - 3
மஞ்சள் அட்டை
சென்னை - 4
கோவா - 2