இந்தியன் சூப்பர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நார்த்ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்.சி. அணியும் பங்கேற்றிருக்கிறது. இதனிடையே, நார்த்ஈஸ்ட் - பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகள் மோதும் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.
புதியதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவிகிறது. இதன் காரணமாக கவுஹாத்தி நகரில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெறவுள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஐஎஸ்எல் தொடரை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் (எஃப்.எஸ்.டி.எல்.) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நார்த்ஈஸ்ட் யுனைட்டெட், பெங்களூரு எஃப்.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் ரசிகர்களின்றி காலியான மைதானத்தின் முன்பே இப்போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாகப் போராட்டம் காரணமாக கவுஹாத்தி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டிசம்பர் 12ஆம் தேதி அங்கு நடைபெறவிருந்த நார்த்ஈஸ்ட் யுனைட்டெட், சென்னையின் எஃப்.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி ராஞ்சிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹைதராபாத் அணியில் மிட்சல் ஸ்டார்க்? டேவிட் வார்னர் பதிவால் குழப்பமடைந்த ரசிகர்கள்!