இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் ஆடும் இந்த தொடரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் களமிறக்கப்படுவார்கள்.
இந்நிலையில், ஜம்ஷெத்பூர் அணியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆடிவரும் பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் எமர்சன் கோமிஸ் டி மோரா(மீமோ), அந்த அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தை மேலும் ஓர் ஆண்டு நீட்டித்துள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.
மிட்-ஃபீல்டராக செயல்படும் மீமோ கடந்த ஐஎஸ்எல் சீசனில் அதிக முறை பாஸ் செய்த 10 வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும், ஜம்ஷெத்பூர் அணிக்காக இரண்டு முக்கியமான கோல்களையும் அவர் கடந்த சீசனில் அடித்தார்.
இதுகுறித்து பேசிய எமர்சன், நான் இந்த ஜம்ஷெத்பூர் அணிக்காக விளையாடுவதை மகிழ்ச்சியானதாகக் கருதுகிறேன். ஒவ்வொரு முறை நான் இங்கு விளையாடும் போதும் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும், எனது அணியினருடன் நல்ல புரிதலுடன் இருந்து வருகிறேன் என தெரிவித்தார்.