சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் முக்கியப் பங்கு வகித்தவர் அர்ஜென்டினாவின் டியாகோ மாரடோனா. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு சிகிச்சைப் பெற்று முடித்து வீடு திரும்பிய மாரடோனா, நவ. 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மாரடோனாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அர்ஜென்டினா காவல் துறையினர், புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மாரடோனாவின் மருத்துவர், அவரது உறவினர்களிடையே விசாரணை நடத்தக்கோரி உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற புலனாய்வுக் குழு, மாரடோனாவின் மருத்துவர் லியோபோல்டோ லுக்கிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது அலுவலகத்தையும் சோதனை செய்துள்ளனர். இச்சோதனையின் முடிவில் மாரடோனா கடைசியாக எடுத்துக்கொண்ட சிகிச்சைப் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளதாகப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் மாரடோனாவின் உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக நீதிமன்ற புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: முதல் வெற்றிக்காக போராடும் கோவா; தோல்வியைத் தவிர்க்கும் முனைப்பில் நார்த் ஈஸ்ட்