ஆசிய கல்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் அண்டர் 16 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரமான தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருக்கும் ’இந்திய அண்டர் 16’ அணி - ’துர்க்மெனிஸ்தான் அண்டர் 16’ அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே இந்திய அணி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் சுபோ பால் கோல் அடித்து அணியின் கோல் கணக்கைத் துவக்கி வைத்தார்.
அதன் பின் இந்திய அணியின் சித்தார்த் 40’ஆவது நிமிடத்திலும், டைசன் சிங் 55’ஆவது நிமிடத்திலும், ஹிமான்ஷு ஜங்ரா 90’ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள். பின்னர் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டதில் இந்திய அணியின் சித்தார்த் 90+1’ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்து அசத்தினார்.
ஆனால் துர்க்மெனிஸ்தான் அணி ஆட்டத்தின் முடிவு வரை ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறியதால் ஆட்டநேர முடிவில் இந்திய அண்டர் 16 அணி 5-0 என்ற கோல் கணக்கில் துர்க்மெனிஸ்தான் அண்டர் 16 அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
நாளை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய அண்டர் 16 அணி பஹ்ரைன் அண்டர் 16 அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.